உண்மையான-முழுமையான விவாதம் நடைபெற நமக்கு வேண்டியவை இரண்டு பண்புகள்!
ஒன்று-உங்கள் கருத்துக்கு மதிப்பு ஏற்படவேண்டுமானால் மற்றவர் கருத்துக்கு மதிப்புத்தரவேண்டும். எனக்குத்தான் எல்லாம் தெரியும், பிறருக்கு எதுவும் தெரியாது என்று எண்ணிடும் போக்குக் கூடாது.
இரண்டு-மற்றவர் கருத்தைக் கேட்கும் வேளையில் மிகுந்த பொறுமை காட்டவேண்டும்!
இது மிகவும் கடினமான காரியம்தான்; அதிலும் வெப்பம் மிகுந்த பகுதியான நமது நாட்டில் உணர்ச்சிகள் விரைவில் தலை தூக்கும். குளிர் நாடாக இருந்தால் உணர்ச்சிகள் எழவும் எழுந்த உணர்ச்சி அடங்கவும் அதிகக் காலமாகும். ஆனால் வெப்பம் மிகுந்த இந்த நாட்டில் காலமோ-காரணமோ இல்லாமல் கூட உணர்ச்சி பொங்குவதுண்டு. இன்னும் சில சமயங்களில் நிஜ உருவங்களுடன் சண்டை போடுவதை விட வதந்திகள் கிளப்பிய நிழல் உருவத்துடன் நாம் சண்டை போடுவதுண்டு!